சென்னை: தமிழ்நாடுஅரசு வீடு கட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.5 லட்சம் தரப்போகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டசபையில் 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட்டிருந்தது. இந்த திட்டம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் (ஜூன்) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர போகிறது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இந்த திட்டத்தை ஆரம்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினாராம். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இன்னும் சில நாட்கள் கழித்து அமலுக்கு வரப்போகிறதாம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பினார்.