திருவனந்தபுரம்: ரூபாய் 12 கோடி பரிசுத்தொகை கொண்ட விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் இரண்டு நாட்களுக்கு முன்பு டிக்கெட் வாங்கிய ஆலப்புழாவை சேர்ந்த முதியவருக்கு 12 கோடி பரிசு அடித்துள்ளது.
தமிழகத்தின் அண்ட மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மாநில அரசே லாட்டரி சீட்டு விற்பனையை நடத்தி வருகிறது. கேரள அரசிற்கு லாட்டரி விற்பனை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. ரூ.75 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான பரிசுத்தொகையுடன் தினசரி லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது.
விஷூ பம்பர் லாட்டரி: அதுபோக பம்பர் லாட்டரி சீட்டுக்களும் சீசனுக்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்படுகின்றன. கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மழைக்கால பம்பர், ஓணம் பம்பர், உள்ளிட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், ரூபாய் 12 கோடி பரிசுத்தொகை கொண்ட விஷூ பம்பர் லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. முதல் பரிசுத்தொகை வெல்ல போகும் அதிர்ஷ்டசாலி யார் என்று கேரள மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில் VC490987 என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது. இந்த எண் கொண்ட டிக்கெட் ஆலப்புழாவில் விற்பனையானது தெரியவந்தது.
12 கோடி பரிசு: இந்த நிலையில், தான் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பழவீடு பகுதியை சேர்ந்த விஷ்வபரன் என்ற முதியவர் தான் 12 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி என தெரியவந்துள்ளது. சிஆர்பிஎப்பில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற விஷ்வன்பரன் லாட்டரி டிக்கெட்டுகளை பல ஆண்டுகளாக வாங்கி வருகிறாராம். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக இவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் அடித்துள்ளது.
2 நாளுக்கு முன்பு தான்: பழவீடு அருகே உள்ள லாட்டரி கடை ஒன்றில் பரிசுத்தொகை அடித்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார் விஷ்வன்பரன். தற்போது எல்லையில்லா மகிழ்ச்சியில் இருக்கும் விஷ்வன்பரன் தனது வீட்டை மறுசீரமைப்பு செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பரிசுத்தொகை அடித்த லாட்டரியை விற்ற லாட்டரி கடை உரிமையாளரான ஜெயா என்பவர் கூறுகையில், “கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் இந்த டிக்கெட் விற்பனையானது. யாருக்கு விற்றோம் என்பது எனக்கு மறந்துவிட்டது. எனது கடையில் பலரும் ரெகுலராக லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள். எனவே யாரிடம் விற்றோம் என்ற நினைவு எனக்கு இல்லை” என்றார்.
இரண்டாம் பரிசு 1 கோடி: விஷூ பம்பர் லாட்டரியில் இரண்டாம் பரிசாக 6 பேருக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. VA205272, VB429992, VC523085, VD154182, VE565485, VG 654490 ஆகிய எண்களுக்கு இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடி அடித்துள்ளது. லாட்டரியில் 10 ஆயிரத்திற்கு மேல் பரிசுத்தொகை விழுந்தவர்களுக்கு 30 சதவீதம் வரி பிடித்தம் போக ஏனைய தொகை அவர்களுக்கு வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
42 லட்சம் டிக்கெட்கள் விற்பனை: இதேபோல் இந்த விஷூ பம்பர் லாட்டரியில் இந்த ஆண்டு 42 லட்சம் டிக்கெட்டுகள் பிரிண்ட் செய்யப்பட்டு இருந்தது. இதில், 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகமல் இருந்துள்ளது. ஏனைய அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.
தமிழகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை உள்ளது. லாட்டரியால் ஏழை எளிய மக்களின் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து கடும் இன்னலுக்கு ஆளாவதால் லாட்டரி விற்பனையை தமிழக அரசு தடை கடந்த 2003- ஆம் ஆண்டு தடை விதித்தது. அதன்படி தமிழகத்தில் லாட்டரி விற்பனை செய்வது சட்ட விரோதம் ஆகும்.