இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மெரிடியன் எஸ்யூவி மாடலுக்கு சில அப்டேட்களைக் கொடுத்து ஃபேஸ்லிப்ட் வெர்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது ஜீப். தற்போது அந்த ஃபேஸ்லிப்ட் வெர்ஷனானது இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும் போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கிறது ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிப்ட் மாடல்.
மெரிடியன் ஃபேஸ்லிப்ட் மாடலில் சின்னச் சின்ன டிசைன் மாற்றங்களை மட்டுமே ஜீப் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. முக்கியமாக முன்பக்க கிரில், பம்பர் மற்றும் ஃபாக் லேம்ப் ஹவுசிங் ஆகியவற்றின் மறுவடிவமைப்பை நாம் எதிர்பார்க்கலாம். இது தவிர பெரிய மாற்றங்கள் எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ரேங்ளர் மற்றும் காம்பஸ் ஆகிய மாடல்களின் ஃபேஸ்லிப்ட் வெர்ஷன்களிலும் பெரிய அளவில் டிசைன் மாற்றம் எதுவும் அந்நிறுவனம் செய்யவில்லை. மெரிடியனிலும் அது தொடரவிருக்கிறது.
வெளிப்புறத்தைப் போலவே உட்புறத்திலும் பெரிய டிசைன் மாற்றம் எதுவும் இருக்காது. தற்போதைய மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் டேஷ்போர்டே புதிய மாடலிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய மெரிடியன் ஃபேஸ்லிப்ட் மாடலில் ADAS பாதுகாப்பு அம்சங்களை ஜீப் கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஃபேஸ்லிப்ட் மாடலின் சிறப்பம்சமும் அதுதான்.
ஏற்கனவே வசதிகள் நிறைந்த எஸ்யூவி மாடலாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஜீப் மெரிடியன். 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், கனெக்டட் டெக், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் பவர் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் ஒன்பது ஸ்பீக்கர்கள் கொண்ட அல்பைன்-ட்யூன்டு ஆடியோ சிஸ்டம் ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கிறது தற்போதைய மெரிடியன் மாடல். அதன் ஃபேஸ்லிப்ட் வெர்ஷனிலும் இதே வசதிகளே தொடரவிருக்கிறது.
டிசைனிலேயே பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத போது, ஃபேஸ்லிப்டின் இன்ஜினில் நாம் மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் 170hp பவர் மற்றும் 350Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய ஒரேயொரு 2.0 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே மெரிடியன் மாடலை விற்பனை செய்து வருகிறது ஜீப். ஃபேஸ்லிப்ட் மாடலும் இந்த இன்ஜினுடன் மட்டுமே வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த இன்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு டார்க் கண்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வருகிறது.
தற்போதைய ஜீப் மெரிடியன் மாடலானது ரூ.33.60 லட்சம் முதல் 39.66 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மெரிடியன் ஃபேஸ்லிப்ட் மாடலானது இதனை விட சற்றுக் கூடுதலான விலையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஜீப் மெரிடியன்.