2006ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த கல்லூரி திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
தனது அப்பாவித்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த தமன்னாவிற்கு, இப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமிபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் இவரது அம்மா சென்டிமென்ட் காட்சிகள் பலரையும் கவர்ந்து வசூலில் வாரி குவித்தது.
அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது சம்பளத்தை உயர்த்திய தமன்னாவிற்கு அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹெப்பாலில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடத்புத்தகத்தில் நடிகை தமன்னா குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது.
அந்த பாடத்தில் தமன்னா பிறந்த தேதி, இவர் நடித்த திரைப்படங்கள் மற்றும் அவரது நடிப்பு திறமை ஆகியவை இடம் பெற்றிருப்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பெற்றோர்கள் எதிர்ப்பு:
எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களின் பெற்றோர், அவரைப் பற்றி எங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறினர்.
அத்துடன் பள்ளி நிர்வாகத்தையும் கண்டித்துள்ள அவர்கள் ஒரு நடிகையிடம் இருந்து எங்கள் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பாட புத்தகத்தில் சேர்த்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்து வருகின்றனர்.