உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா களம் இறங்க கூடாது என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் ஆலோசனை கூறியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு மாதங்களாக கோலாகலமாக நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து இந்திய அணி அடுத்த அசைன்மெண்டான டி20 உலக கோப்பை தொடருக்கு தயாராகிவிட்டது.
அடுத்த மாதம் 2-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. ஜூன் மாதம் 29ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.
அவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், தொடக்க வீரர்களாக விராட் கோலியும், யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களம் இறங்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா மூன்றாவது இடத்திலும், சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் களம் இறங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா சுழற் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால் அவர் நான்காவது பேட்ஸ்மனாக களம் இறங்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஜூன் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள தனது முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் இந்திய அணி மோதும் அனைத்து போட்டிகளும் அமெரிக்காவில் நடைபெறுகின்றன.